Published : 24 Jul 2023 06:27 AM
Last Updated : 24 Jul 2023 06:27 AM
தாம்பரம்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் அவரது சகோதரி உட்பட 5 பேரை ரயில்வே தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகரில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி (34). ரயிலில் தின்பண்ட வியாபாரம் செய்து வந்தார். கணவர் இறந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரைத் திருமணம் செய்து ஆதம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த 19-ம் தேதி இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து மர்மநபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரி நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார், தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
இந்நிலையில் இக்கொலை சம்பவத்தில் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, அவரது கணவர் சக்திவேல், சூர்யா, ஜெகதீஸ், ஜான்சன் ஆகிய 5 பேரை ரயில்வே தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் 3 பேரை கோவளத்திலும் 2 பேரை உள்ளகரத்திலும் கைது செய்தோம். இறந்த ராஜேஸ்வரியின் தங்கை கணவர்தான் சக்திவேல், அக்காவை கொல்ல தங்கை உதவியிருக்கிறார் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, கொருக்குபேட்டையில் ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அலுவலக நேரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்தில் ரயில்வே போலீஸார் மூலம் இதுவரை 131 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. 847 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 92 போன்கள், 12 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT