‘கிரைம் பேட்ரோல்’ தொலைக்காட்சி தொடரை பார்த்து உத்தராகண்டில் நல்ல பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்த பெண்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான்.இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் மஹி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மஹி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்துள்ளார். மேலும் கொலைத் திட்டத்தில் தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக்காரி உஷாதேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

மேலும் கொலை செய்வது எப்படி என்பதை ‘கிரைம் பேட்ரோல்’ என்ற தொலைக்காட்சி தொடரைப் பார்த்து கற்றுத் தேர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கொலை செய்வது எப்படி, தடயங்களை அழிப்பது எப்படி என்பதை யூடியூப் மூலம் பார்த்துள்ளார்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்துவிட்டார். இந்நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மஹி ஆர்யா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். அண்மையில் நல்ல பாம்பை வாடகைக்குக் கொடுத்த பாம்புப் பிடாரன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறியதாவது:

மஹி ஆர்யா, கிரைம் ஷோவான,‘கிரைம் பேட்ரோல்’ தொடரை டி.வி.யில் தொடர்ந்து பார்த்து வந்து, கொலை செய்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டுள்ளார்.

பாம்புப் பிடாரன் ஒருவரை அழைத்து வந்து நல்ல பாம்பை ஏவி விட்டுள்ளார். மஹி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மஹி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

20 நாட்களுக்கு முன்னதாகவே கண்காணிப்புக் கேமராக்களையும் அவர் ஆஃப் செய்துவிட்டார். இதனால் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். தலைமறைவான 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம். அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களைக் கைது செய்வோம். இவ்வாறு நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in