

சென்னை: விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் பழங்குடி குறவன் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, புளியாண்டபட்டி கூட்டு ரோடு கிராமத்தில் வசிக்கும் பட்டியல் பிரிவைச் சேர்ந்த குறவன் இன மக்களான 5 பெண்கள், 3 ஆண்கள், 2 ஆண் குழந்தைகள் என 10 பேரை கடந்த மாதம் 7, 9, 11, 12 ஆகிய 4 தேதி களில் ஆந்திரபிரதேசம் மாநில சித்தூர் மாவட்ட க்ரைம் பிரிவு போலீஸார் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சாதி பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியுள்ளனர்.
மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் 2 பேரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், ராட்டினத்தில் கட்டித் தொங்க விட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மிளகாய் பொடி தடவி சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில போலீஸாரின் இச்செயலுக்கு தமிழக போலீஸார் துணை புரிந்துள்ளனர். எனவே, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நேரடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆந்திர போலீஸார் 20 பேர், அவர்களுக்கு துணை போன தமிழக போலீஸார் மீது சட்டப்படி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட 10 பேருக்கும் அரசு நிவாரணமாக தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க ஆந்திரமாநில போலீஸாரால் பாதிப்புக்குள்ளான பெண்கள் டிஜிபி அலுவலகம் வந்து, தாங்கள் எப்படி எல்லாம் சித்ரவதை செய்யப்பட்டோம் என்பதை கூறி கண்ணீர் வடித்தனர். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார்.