

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(38). இவர், பாஜக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அடிதடி வழக்கில் ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக பாஜக பிரமுகர்வினோத்குமார் நீதிமன்றத்துக்கு வந்தார். இதே வழக்கு விசாரணைக்காக உதவி காவல் ஆய்வாளர் ஜெகநாதனும் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்திலேயே பாஜக பிரமுகர் வினோத்குமார், என் மீதே வழக்குப்பதிவு செய்தாயா? எனக்கூறி ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நேற்று ஜெகநாதன் புகார் செய்தார். அதன்பேரில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகர் வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நேற்று ஜெகநாதன் புகார் செய்தார்.