ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி படுகொலை

Published on

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி(34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழவியாபாரம் செய்து வந்தார். மேலும்,சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்மநபர்கள் சிலர் பின் தொடர்ந்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார், 3 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: இறந்த ராஜேஸ்வரிக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த டக்கா மணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இமானுவேல்(11), சோபியா(7) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். டக்கா மணி இறந்தவுடன் புவனேஷ் என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வியாபார போட்டியால் முன்விரோதம்ஏற்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 3 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in