Published : 21 Jul 2023 06:16 AM
Last Updated : 21 Jul 2023 06:16 AM

திருப்போரூர் | ஆலத்தூரில் பிளாஸ்டிக் டிரம்மில் ஆண் உடல்: மனைவியாக வாழ்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து துர்நநாற்றம் வீசியதை அடுத்து திருப்போரூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பூட்டிய வீட்டின் உள்ளே பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்த கிடந்த நபர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த அன்னம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வளத்தி கோவிலன் (72) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருடன் வசித்து வந்த எழிலரசி என்ற பெண்ணை போலீஸார் தேடி வந்தனர். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வடசென்னை இருந்த பெண் ஒருவருடன் பேசி இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் எழிலரசியை கண்டு பிடித்த போலீஸார் அவரை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் வளத்தி கோவிலனும் எழிலரசியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வளத்தி கோவிலனின் மனைவி இறந்த பிறகு அவர் எழிலரசியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், ஆலத்தூர் பகுதியில் 6 ஆண்டுகளாக வசித்து வந்ததாகவும் தெரிய வந்தது.

கடந்த சில நாட்களாக வளத்தி கோவிலனின் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், ஒருநாள் அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டதாகவும், இதனால் பயந்துபோன தான் பிளாஸ்டிக் டிரம்மை சாய்த்து அவரை உள்ளே தள்ளி பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி விட்டு சென்று விட்டதாகவும், தான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆலத்தூரை அடுத்து கருங்குழிப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் காவலாளியாக உள்ள ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x