

பூந்தமல்லி: சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் சென்ட்ரிங் தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி-கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, முகப்பேர் கிழக்கு - நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம்(49). சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவு, பாடி புதுநகரை சேர்ந்தவர் சிவகுமார்(43). நண்பர்களான இருவரும், அண்ணா நகர் மேற்கு விரிவு - வட்ட வடிவ நகர் பகுதியில் சாலையோர நடைமேடையில் தங்கி, சென்ட்ரிங் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, ஜூன் 26-ம் தேதி இரவு, நடைமேடையில் தங்கியிருந்த ஆறுமுகம், சிவகுமார் ஆகிய இருவருக்கும் இடையே மது அருந்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றியதில், கோபமடைந்த சிவகுமார், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஆறுமுகத்தை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஜெ.ஜெ.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் வாதாடினார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், சிவகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, பூந்தமல்லி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ன் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார். ஆறுமுகத்தை கொலை செய்த குற்றத்துக்காக சிவகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.300 அபராதமும் விதிக்கப்பட்டது.