

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டன.
ஆனால், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக பழையகட்டிடம் எதிரே உள்ள கூட்ட அரங்கத்தில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ மற்றும் ஊர் மக்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தை பொதுப் பணித்துறை மாநில ஆணையரிடம் அனுமதி பெற்ற பின் தான் வழங்க முடியும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மகளிர் காவல் நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பத்மினி பாமா என்ற காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு எஸ்ஐ, 2 தலைமைக் காவலர்கள் மற்றும் 4 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆய்வாளருக்கான வாகனமும் வழங்கப்பட்டது.
இவர்கள் கடந்த மூன்று மாதமாக காவல் நிலைய கட்டிடம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெண்கள் அளிக்கும் புகார்களை, அந்த பகுதியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்களில் வைத்து விசாரிக்கின்றனர். அல்லது புகார் தாரர்களின் வீடுகளுக்கே சென்று விசாரிக்கின்றனர். சில நேரம் ஆய்வாளர் தனது ஜீப்பிலேயே வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இது குறித்து சாத்தான் குளம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகன் கூறும்போது, “சாத்தான் குளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த மூன்று மாதமாக காவல் நிலையத்துக்கான கட்டிடம் ஒதுக்கப்படாததால், புகார் அளிக்க வரும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாத்தான்குளத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்” என்றார்.