

சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்டரயில் நிலையங்களில் பயணிகளிடம்போலி டிக்கெட் கொடுத்து, ஓராண்டாக ஏமாற்றி வந்தவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணத்துக்காக காத்திருக்கும் பயணிகளை அணுகிய ஒருநபர், ஒரு நோட்பேடில் சீல் வைத்து, டிக்கெட் என்று கூறி விற்பனை செய்து, ஏமாற்றி வருவதாக ரயில்வேபோலீஸுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, ரயில்வே காவல்கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், டிஎஸ்பி ரமேஷ்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ரயில் நிலையங்கள், முன்பதிவு மையங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் முதல்தளத்தில் போலியாக நோட்பேடு, ரப்பர் ஸ்டாம்பு மற்றும் ஸ்டாம்பேடு ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜீதேந்திரஷா (38) என்பதும், சென்ட்ரல், பெரம்பூர்,எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளிடம் போலி டிக்கெட்விற்று வந்ததும் தெரியவந்தது.
ரயில்வே முதன்மை அதிகாரி என்றும் நோட்பேடில் பயணிகள் பெயர், வயது மற்றும் அவர்கள் செல்லும் இடம், ரயில் பெயர், பயணத் தொகை ஆகியவற்றை கையால் எழுதி கையெழுத்திட்டு, `முதன்மை அதிகாரி ஹைதராபாத் தெலங்கானா' என சீல் வைத்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் பயணிகளிடம் ``இந்த டிக்கெட்டை எடுத்து செல்லுங்கள். டிக்கெட் பரிசோதகர் உங்களிடம் எதுவும் கேட்க மாட்டார், உங்களுக்கு சீட் ஓதுக்கீடு செய்து கொடுப்பார்'' என போலியான வாக்குறுதி அளித்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
டிக்கெட் விற்பனை மற்றும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக 1512, வாட்ஸ்-அப் எண் 9962500500 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.