

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 16-ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, நேற்று (ஜூலை 18) மாலை காட்டம்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் கொலை செய்து வீசப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியானபோதும், கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ‘அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், சிறுவனை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சம்பவம் குறித்து சிறுவன் வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிறுவனை கொலை செய்து சடலத்தை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளார். எனவே, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிறுவனின் சடலத்தை ஒரு நபர் மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதிக்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது என்பதால், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும வலியுறுத்தியு கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் சிறுவனின் உறவினர்கள் இன்று (ஜூலை 19) காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.