

பெரும்பாக்கம்: நிலம் விற்ற பணத்தை தந்தை தராததால் அவரது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசிய மகனை போலீஸார் தேடுகின்றனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம், பாரதியார் தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நிலத்தை விற்ற பணம் ரூ.3 லட்சத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்று அவருடைய மகன் அருண் (30) கேட்டுள்ளார்.
தந்தை பன்னீர்செல்வம் தராததால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் அருண் வீட்டை விட்டு வெளியே சென்று பின்னர் சிறிது நேரத்தில் மைத்துனர் பிரவீனுடன் மீண்டும் வந்து வீட்டில் வாசலில் நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில், அருணின் சித்தப்பா வெற்றி வேந்தன் மற்றும் அருணின் தங்கை ரேக்கா இருவருக்கும் காலில் சிறிது காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வீட்டில் ஏதேனும் நாட்டு வெடிகுண்டு இருக்குமா என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்து சோதனை செய்ததில் அருண் வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவற்றை மீட்டு போலீஸார் செயலிழக்க வைப்பதற்காக எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருண் மற்றும் பிரவீன் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.