

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள மத்திய அரசு அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜீவ் நாயர் (55). இவர் மத்திய உளவுத் துறையில் (ஐ.பி.)துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரையில் தர்ப்பணம் செய்து, கண்களை மூடி தியானம் செய்தார்.
பிறகு கைப்பை இருந்த இடத்தைப் பார்த்தபோது அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருடுபோன கைப்பைக்குள் ராஜீவ் நாயரின் அடையாள அட்டை, செல்போன், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ரூ.1,500 இருந்துள்ளது. திருடுபோன ராஜீவ் நாயரின் செல்போன் டவர் லோக்கேஷன் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் துப்புத் துலக்கப்பட்டு வருகிறது.