

சென்னை: திமுக நிர்வாகியின் பேனரை கிழித்தவிவகாரத்தில் திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மீது ராயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (37). இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மைபிரிவு தலைவராக உள்ளார். மேலும், பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு, ஜிஏ ரோடுவட்டார வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
அண்மையில்தான் இவருக்குதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு வாழ்த்துதெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர் வைத்திருந்தனர். இது ராயபுரம் கிழக்கு பகுதி, 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசனுக்கு பிடிக்கவில்லை.
தமிமுன் அன்சாரிக்கும், ஜெகதீசனுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக தமிமுன் அன்சாரியின் பேனரை கடந்த 12-ம் தேதி கிழித்துள்ளார்.
இதுகுறித்து ராயபுரம் காவல்நிலையத்தில் தமிமுன் அன்சாரி புகார் அளித்தார். ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘தற்போது வழக்குபதியப்பட்ட ஜெகதீசன், வியாபாரிகளிடம் மாமூல் கேட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரோந்து போலீஸாரை மிரட்டிய விவகாரத்தில், இவர் மற்றும் இவரது கூட்டாளிகள் மீது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதேபோல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன’ என்றனர்.