

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்- திருவண்ணா மலை சாலையில் உள்ள தாமரை நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(53). இவரது மனைவி கணேஷ்வரி(46). இவர்களுக்கு பாலாஜி(24), முருகன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மகேந்திரன் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பழக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தம்பதி வீட்டில் இருந்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த இருவர் பட்டா கத்தியுடன் வீட்டினுள் நுழைந்து இருவரையும் தாக்கி விட்டு, கணேஷ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் நகைகளை பறித்தனர். அப்போது வீட்டுக்கு வந்த பாலாஜியையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தும் திருடர்கள் வீட்டினுள் நுழைந்ததும், சிசிடிவி வயரை துண்டித்ததால் முகமூடி அணிந்து வீட்டினுள் வருவது மட்டும் கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.