

சென்னை: ஆன்லைனில் பரிசுப் பொருட்கள் அனுப்புவதாக மோசடி செய்து இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்வார்பேட்டை பராக்கா சாலையை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் அஸ்வினி (20). அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தலைமை செயலக காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்வினி, சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒருவரிடம் நட்பாக பழகிவந்தது தெரியவந்தது. அவர்தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், அஸ்வினியிடம், அவரது வீட்டு முகவரிக்கு பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த பொருட்களை பெறுவதற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி குறிப்பிட்ட தொகையை கேட்டு பெற்றுள்ளார்.
அவ்வப்போது அஸ்வினியிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் டெல்லியில் இருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு அஸ்வினியை தற்கொலைக்கு தூண்டிய மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மவுசா (30) என்ற இளைஞரை கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.