

தஞ்சாவூர்: செல்போன் அழைப்பு மூலம் கும்பகோணத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்து அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று, அந்தப் பொருட்களைக் கடையிலுள்ள சேல்ஸ்மேன்கள் மூலம் வீட்டுக்கு பொருட்களை அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு போன் மூலம், எங்களுக்கு 7 மூட்டை அரிசி உடனடியாக இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2 சேல்ஸ்மேன்கள் 7 மூட்டை அரிசியை இரு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு, ஆர்டர் கொடுத்த முகவரியான கும்பகோணம் பந்தடி மேடை அருகேயுள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்கவரிடம் வந்தனர்.
அப்போது அந்த மர்ம நபர், ‘6 மூட்டை அரிசியை இங்கே இறக்கி வையுங்கள், மீதமுள்ள 1 மூட்டையை ஜான் செல்வராஜ் நகரில் உள்ள எனது நண்பர் வீட்டில் இறக்கி வைத்து விட்டு, வாருங்கள். இதற்குரிய பணத்தை வழங்குகிறேன்’ எனக் கூறியுள்ளார். பின்னர், 2 சேல்ஸ்மேன்களும் மீதமுள்ள ஒரு அரிசி மூட்டையுடன், அந்த முகவரிக்கு சென்றபோது, அங்கு, அந்த நபர் கூறியவர் இல்லாததால், அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மீண்டும் 6 மூட்டைகளை இறக்கி வைத்த இடத்திற்கு வந்தனர். ஆனால், அங்கு இறக்கி வைத்த 6 அரிசி மூட்டைகளும், அந்த நபரும் இல்லை.
இதையறிந்து சேல்ஸ்மேன்கள் 2 பேரும், சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பக்ருதீன், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார், அதற்குரிய மனு ரசிது வழங்கி, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் கூறியது, "இதுபோன்ற நூதன மோசடிகள், கும்பகோணம் பகுதிகளிலுள்ள வணிகர்களிடம் நடந்து வருகிறது. அந்த மர்ம நபர்கள் வணிகர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சில்லறைக் காசுகள் எங்களிடம் உள்ளது. சுவாமிமலை கோயிலுக்கு வாருங்கள் என்று கூறி வரவழைத்து, வணிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இதோ மாற்றித் தருகிறேன் என்று கூறி, பணத்திற்கான சில்லறைக் காசுகளைக் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இது தொடர்பாக கோயில் அலுவலரிடம் கேட்டபோது, கோயில் உண்டியில் காணிக்கைகளை நேரடியாக வங்கியில் வழங்கப்பட்டு விடும் எனக் கூறுகின்றனர். இதுபோன்ற நூதன முறையில் மோசடி செய்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.