

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளரான தனது உறவினரின் வீட்டுக்கு அந்த மாணவி செல்வது வழக்கம். கடந்த 2017 மார்ச் 29-ல் அந்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோ எடுத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதில் மனமுடைந்த மாணவி, 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதம் மூலம் இந்தசம்பவம் வெட்ட வெளிச்சமானது. அதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பள்ளி தாளாளரையும், அவரதுமனைவியையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது.அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிஅளித்த தீர்ப்பில் கூறியிருப்ப தாவது:
இந்த வழக்கில் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக பிறழ்சாட்சியாக மாறியது துரதிருஷ்டவச மானது. அந்த சிறுமியின் தந்தைகூட தனது மகளை பாதுகாக்கத் தவறிவிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளித் தாளாளருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித் துள்ளார்.