

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட தள்ளு வண்டிகளில் இருந்து 81 இஸ்திரி பெட்டிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவல்லிகேணி, அப்பாவு தெருவில் வசித்து வருபவர் ராசு. இவர், தள்ளுவண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து, துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 06.07.2023 அன்று இரவு தள்ளுவண்டியை திருவல்லிகேணி, அப்பாவு தெருவில் சாலையோரம் நிறுத்திவிட்டு, மறுநாள் 07.07.2023 காலை வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் வைத்திருந்த இஸ்திரிபெட்டி மற்றும் பணம் ரூ.6,000/- திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து D-1 திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
D-1 திருவல்லிகேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அஜயன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 38 இஸ்திரிபெட்கள், ரொக்கம் ரூ.12,000/- மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட அஜயன் மற்றும் அவரது கூட்டாளி ராமச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், அபிராமபுரம், ராயப்பேட்டை, அபிராமபுரம், தேனாம்பேட்டை மற்றும் பட்டினம்பாக்கம் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளு வண்டிகளில் உள்ள இஸ்திரி பெட்டிகளை திருடியுள்ளது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அஜயன் மீது, ஏற்கனவே 25 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (13.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.