

சென்னை: தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கு தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வு பெற்ற டிஜிபி ரவி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தாம்பரம் காவல் முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், நல்வழிப்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். மேலும், அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து ‘யூ டியூப்பில்’ வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரவி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது புகைப்படம் மற்றும் சுய விவரத்தைப் பயன்படுத்தி போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அக்கும்பல், நான் பதிவிட்டதுபோல், நண்பர் ஒருவரிடமிருந்து ஃபர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அது நன்றாக உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தும் அனைவருக்கும் தகவல் (மெசேஜ்) அனுப்பி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி ஃபேஸ்புக் பக்கத்தை முடக்க வேண்டும்” எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓய்வு பெற்ற டிஜிபி பெயரிலேயே ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.