

சேலம்: சேலத்தில் இயங்கி வரும் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊழியர்கள் அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் (40). இவர் சேலம் அழகாபுரம் எல்ஐசி காலனியில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பயற்சி அளிக்கும் மையத்தை நடத்தி வருகிறார். இந்தச் சிறப்புப் பயிற்சி மையத்தில் வாய்பேச முடியாத, மன வளர்ச்சி குன்றிய 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். சேலம் தளவாய்ப்பட்டி பகுதியை சேர்ந்த அகிலா (40) மகன் சூர்யாவாசன் (9) மனவளர்ச்சி குன்றிய நிலையில், இந்தச் சிறப்புப் பள்ளியில் பயின்று வந்தார். அகிலா ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கிராம செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், சிறப்பு மையத்தில் தனது குழந்தை சூர்யாவாசனை விட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 5-ம் தேதி சூர்யாவாசனை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அவனது காலில் வீக்கம் காணப்பட்டது. இது பற்றி அந்த தனியார் மையத்துக்கு சென்று அகிலா கேட்டார். மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தில், சூர்யாவாசனை மூன்று பேர் கம்பால் அடித்து துன்புறுத்தியதில் காலில் வீக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் அகிலா அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில், சிறப்பு மையத்தில் உள்ள குழந்தைகளை ஊழியர்கள் அடித்து துன்புறுத்தியது உறுதியானது. இதையடுத்து, பயிற்சி நிலைய பிசி யோதெரபிஸ்ட், நங்கவள்ளியை சேர்ந்த பாலாஜி ( 25), தாத காப்பட்டியை சேர்ந்த அந்தோணி சகாயம் (28) ஆகியோர் சிறுவனை கம்பால் அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்தச் சம்பவத்தை தடுக்காமல் அழகாபுரம் பாத்திமாநகரை சேர்ந்த பயிற்சியாளர் திருப்பதி (29) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அழகாபுரம் போலீஸார் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இப்பயிற்சி மையத்தில் பயின்று வந்த குழந்தைகள் இதேபோல துன்புறுத்தலுக்கு உள்ளாகினரா என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தையை அடித்து துன்புறுத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து காவல் துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.