

புதுச்சேரி: புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய காரால்விபத்து ஏற்பட்டு 3 பேர் காயமடைய, பொதுமக்கள் அந்த காரை விரட்டிச் சென்று அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்களை சரமாரியாகதாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
புதுச்சேரி நகரின் முக்கியச் சாலையான நேரு வீதியில் தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று நேற்று மாலை தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
அந்த காரை பொதுமக்களும், போலீஸாரும் நிறுத்த முயன்றனர்.ஆனால் கார் நிற்காமல் தொடர்ந்து முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை வழியாக பல இடங்களில் சிறுசிறு விபத்துகளை ஏற்படுத்தி விட்டு வேகமாக சென்றது. இதனால், பொதுமக்கள் ஏராளமானோர் அந்த காரை துரத்தத் தொடங்கினர்.
பொதுமக்கள் திரண்டு விரட்டியதால் கார் லாஸ்பேட்டை விமான நிலைய பின்பகுதியான இடையஞ்சாவடி பகுதி நரிக்குறவர் குடியிருப்பு சாலையோரம் உள்ள புதரில் நுழைந்து நின்றது. காரில்இருந்து இறங்கி 5 பேர் தப்பியோட முயன்றனர்.
அப்போது அவர்களை விரட்டி வந்தபொதுமக்கள் கல், கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். காரையும் அடித்து நொறுக்கினர். இதில் காரில் வந்த 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் 5 பேரையும் பொதுமக்களிடம் இருந்துமீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயங்களுடன் அந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,இந்த கார் விபத்தால் காயமடைந்த 3 பேரும் புறசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த எபினேசர் (20), திலீப்(27), ஆஷிக் (21), நாத் (25), சுனில் (24) என்பது தெரியவந்தது.
கடந்த 7-ம் தேதி புதுச்சேரிக்கு காரில் வந்த இவர்கள் கடந்த 3 நாட்களாக அறை எடுத்து தங்கியிருந்ததும், மது போதையில் காரை தாறுமாறாக இயக்கி பல இடங்களில் விபத்துக்குள்ளாக்கியதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.