Published : 12 Jul 2023 06:13 AM
Last Updated : 12 Jul 2023 06:13 AM
விழுப்புரம்: சென்னை மயிலாப்பூர் ரவுடி கொலை வழக்கில் சரணடைய வந்த 4 இளைஞர்களின் சரணை நீதிமன்றம் ஏற்க மறுத்து, அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா (எ) டொக்கன் ராஜா (45). இவர் ரவுடி சிடிமணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மாலை பல்லக்கு மாநகரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த டொக்கன் ராஜாவை அங்கு வந்த ஒரு கும்பல் கொலை செய்தது. தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீஸார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2003-ம் ஆண்டு கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கில் டொக்கன் ராஜாவை பழிக்குபழியாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கதிரவனை டொக்கன் ராஜா கோஷ்டியினர் கொலை செய்த போது, கதிரவனுக்கு ஒன்றரை வயதில் நரேஷ் குமார் என்ற மகனும், கதிரவன் மனைவி கருவுற்றும் இருந்துள்ளார்.
தற்போது 2 மகன்களும் வளர்ந்து இளைஞர்களாக ஆகிவிட்ட நிலையில், நரேஷ் குமார் தனது தந்தை கதிரவனை கொலை செய்த டொக்கன் ராஜாவை பழி தீர்க்க தனது நண்பர்களுடன் இணைந்துஇந்தக் கொலையை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் கமலா முன்பு நேற்று நரேஷ் குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் ராஜேஷ், சபரிநாத், மனோஜ் குமார் ஆகியோர் ஆஜராக வந்தனர்.
சரியான கோப்புகள் இல்லாத காரணத்தால் நடுவர் இந்த 4 பேரின் சரணை ஏற்கவில்லை. இதையடுத்து, அந்த 4 பேரையும் மயிலாப்பூர் போலீஸார் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT