

நாமக்கல்: சாமியார் வேடத்தில் சுற்றிய சேலத்தைச் சேர்ந்த ரவுடியை குமாரபாளையம் போலீஸார் கைது செய்தனர்.
குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் குமாரபாளையம் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மூவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் தனது பெயர் ஜங்கிலிநாத் அகோரி எனத் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி சாமியார் என்பதும் சேலம் கன்னங்குறிச்சி கே.கே.நகரைச் சேர்ந்த ரவுடி முஸ்தபா (36) என்பதும் தெரியவந்தது. இவர் மீது சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு என 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 4 வழக்குகளில் இவருக்கு எதிராக பிடியாணை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாமியார் வேடத்தில் சுற்றுவது உள்ளிட்ட விவரங்களும் தெரியவந்தன. இதையடுத்து முஸ்தபாவை காவல் துறையினர் கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.