

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாணிக்கம், ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப் பிரியா(20), தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.
அதே குடியிருப்பில் வசித்துவந்த, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. தயாளன் என்பவரது மகன் சதீஷ்(23), சத்யப் பிரியாவை காதலித்து வந்துள் ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லூரிக்குச் செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யப்பிரியாவை, மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார்.
இது தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சதீஷைக் கைதுசெய்தனர். பின்னர், சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர்,சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.