

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரவுடிகளை வீடு தேடிச் சென்று எச்சரித்து வந்த போலீஸார் தற்போது முதல் முறையாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் சிக்கியவர்களையும் நேரில் சென்று எச்சரித்து வருகின்றனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல், கடத்தலைத்தடுக்க போதைப் பொருட்களுக்கு எதிரானசிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்கொண்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ரவுடிகள், குற்ற வழக்குகளில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடு தேடிச் சென்று போலீஸார் எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் சிக்கியவர்கள், தொடர்புடையவர்கள் என 429பேரின் வீடு தேடிச் சென்று போலீஸார் எச்சரித்தனர். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான கண்காணிப்பு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.