

சென்னை: காதலிக்க மறுத்ததால் நடுரோட்டில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு பூந்தோட்டம் தெருவைசேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன். இவரது மகள் அஷ்மிதா(18). இவர் அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.
வழக்கம் போல நேற்று கல்லூரிக்குச் சென்ற அஷ்மிதா, கல்லூரி முடிந்து மாலை வீட்டுக்குச் செல்ல ஏழுகிணறு 2-வது தெருவில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்துப் பேச முயன்றார். அஷ்மிதா, அந்த இளைஞரிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஷ்மிதாவின் கழுத்தில் குத்தினார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள்ஓடி வந்தனர். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தமாணவியை மீட்ட மக்கள் அருகில்உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மது போதையில் இருந்தார்: இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த நந்தம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் மதுபோதையில் பதுங்கி இருந்த இளைஞரைப் பிடித்தனர்.
அந்த இளைஞரிடம் போலீஸார்விசாரணை நடத்திய பிறகு கூறியதாவது: பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் நவீன்(22). அஷ்மிதாவும், நவீனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது அஷ்மிதாவின் தாயாருக்கு, தெரியவந்ததால், அவர் அஷ்மிதாவை கண்டித்துள்ளார். இதனால், அஷ்மிதா நவீனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
ஆனாலும், தன்னுடனான காதலைத் தொடரும்படி மாணவியை, நவீன் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த அஷ்மிதாவை, நவீன் பின் தொடர்ந்து வந்து, தன்னை காதலிக்கச் சொல்லி தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அஷ்மிதா அதற்கு மறுக்கவே கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்கும் போதுதான், அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. நவீனை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.