காவல் துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு: திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்

காவல் துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு: திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் காவல் துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் திவ்யதர்ஷினி (8). விஜயபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்ததும், திவ்யதர்ஷினியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, காங்கயம் சாலையில் ராஜேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.

நல்லிக்கவுண்டர் நகர் அருகே வந்தபோது, அவர்கள் பின்னால் வந்த நல்லூர் காவல் நிலைய வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரசின்ன கண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் திவ்யதர்ஷினி உயிரிழந்தார். ராஜேஸ்வரி காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சிறுமியின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வாகனத்தை ஓட்டி வந்த வீர சின்ன கண்ணன் போதையில் இருந்ததாகக் கூறி போலீஸாரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் நந்தினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வீரசின்னகண்ணனை பிடித்து, நல்லூர் போலீஸார் விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது,“சாலையின் மையத்தடுப்பை ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது, காவல்துறை வாகனம் மோதியது. இதில், காவல்துறை வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி உயிரிழந்தார். காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்தவர், மது போதையில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது’’ என்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in