

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டிலிருந்து இந்தகாப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தை அதன் நிறுவனர் வீரமணி நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் பெண் ஒருவருக்கு காப்பக நிர்வாகியான வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் சமூக வலைதளம்ஒன்றில் பதிவு செய்தார். இந்த பதிவின்அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்திஅந்த புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக செங்கை ஆட்சியர் ராகுல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த காப்பகம் முறையாக உரிமம் இல்லாமல் அரசு மேய்க்கால் மற்றும் புறம்போக்கு இடத்தில் இயங்கி வருகிறது. விரைவில் காப்பகத்துக்கு சீல் வைக்கப்படும் என்றார்.