

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான இவர், திருவள்ளூரில் ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே உள்ளகூனிபாளையத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் ரூ. 7 லட்சத்தை கருணாகரனுக்கு கடனாக அளித்துள்ளார்.
வங்கியில் பணமில்லாமல்.. அந்த தொகையை கருணாகரன் காசோலைகளாக நாராயணமூர்த்திக்கு கடந்த 2020-ம் ஆண்டுதிருப்பி அளித்துள்ளார். வங்கியில் பணமில்லாமல் அந்த காசோலைகள் திரும்பியதால், நாராயணமூர்த்தி, கடந்த 2020-ம்ஆண்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை முடிவில் கருணாகரன் காசோலைமோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி தீர்ப்பு அளித்தார்.
அத்தீர்ப்பில், காசோலை மோசடி செய்த குற்றத்துக்கு கருணாகரனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து விரைவுநீதிமன்ற நடுவர் தீர்ப்பளித்தார்.
நிபந்தனை ஜாமீன்: மேலும், ரூ.7 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் நாராயணமூர்த்தியிடம் கருணாகரன் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தரவிட்ட விரைவுநீதிமன்ற நடுவர், கருணாகரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியதோடு. அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார்.