சென்னை | மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை

சென்னை | மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை
Updated on
1 min read

சென்னை: மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 3 பேரை தனிப்படை அமைத்துபோலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வியாசர்பாடி காவல் நிலைய போலீஸார் 4 பேர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ‘ஏஏ’ சாலை மேட்டுப்பாளையம் சுரங்கப்பாதை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.

அவர், வியாசர்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் தினகரன் (33) என்பதும், மது போதையில் வாகனத்தை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பெரம்பூர் ரயில்வே சந்திப்பு அருகே இருந்த போக்குவரத்து காவலர்களிடம் அழைத்துச் சென்றனர்.

ஆபாசமாக பேசி மிரட்டல்: இதனால், ஆத்திரம் அடைந்த பிரகாஷ், தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர், 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் அங்குவந்தனர். பிரகாஷை போலீஸாரின் பிடியில் இருந்துவிடுவித்தனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் போலீஸாரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி மிரட்டல் விடுத்தனர். அரைகுறை ஆடையுடன் இருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘என் மீது கைவைத்து பாருடா’’ என சவால் விட்டதுடன், போலீஸாரை தாக்கும் தொனியில் மிரட்டினார்.

தகவல் அறிந்து செம்பியம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்தனர். மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த பிரகாஷ் தினகரன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரகாஷ் தினகரனின் நண்பர்கள் 3 பேர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை அமைத்துதேடி வருகின்றனர்.

போலீஸாரிடம் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்கள் வாக்குவாதம் செய்து ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in