

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் அருகே உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீபக் ரவிச் சந்திரன், காமராஜ். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று மது போதையில் பிரபாகரன் வீட்டுக்குச் சென்று இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து பிரபாகரனின் தங்கை ஹேமலதா அவசர போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தென்கரை போலீஸார் செந்தமிழன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
போதையில் இருந்த தீபக் ரவிச்சந்திரன், காமராஜ் ஆகியோர் போலீஸாரின் சட்டையைப் பிடித்து தகராறில் ஈடுபட்டதுடன் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டினர். போலீஸார் இதனை வீடியோவாக பதிவு செய்தனர். இதைப் பார்த்த காமராஜ், தனது பைக்கில் வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீஸாரை வெட்ட முயன்றார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜோதி பாபு அங்கு வந்த நிலையில் தீபக் ரவிச்சந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பியோடிய காமராஜை தேடி வருகின்றனர்.