

செங்கல்பட்டு: திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியை சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக தெரிகிறது.
மேலும் அவர்களை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 20 பேர் மீட்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கேளம்பாக்கம் போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை.
எனவே இவர்களை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், மாவட்ட நீதித்துறை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், போக்ஸோ வழக்கு பதிவு செய்ய வேண்டும், உடனடியாக நிவாரணம் வழங்கி மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செங்கையில் க.புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் மனுவும் வழங்கப்பட்டது.