கர்நாடகாவில் கொடூரம்: மாற்று சமூகத்தவரைக் காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நெஞ்சை பதைபதைக்க செய்யும் கொடூர குற்றச் சம்பவம் நடந்துள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், அந்தப் பெண்ணின் தந்தை. இந்தச் செய்தியை அறிந்த அந்தப் பெண்ணின் காதலர் தற்கொலை செய்து கொண்டார்.

தங்கத்துக்குப் பிரசித்தி பெற்ற கோலார் பகுதியே இந்த அதிர்ச்சி சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தச் சம்பவம் போடகுர்கி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கீர்த்தி என போலீஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான அவர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

கீர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞரான கங்காதர் என்பவரை காதலித்து வந்துள்ளார். 24 வயதான அவர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கீர்த்தி - கங்காதர் காதல் விவகாரம் கீர்த்தியின் வீட்டில் தெரியவந்துள்ளது. பட்டியலின வகுப்பை சேர்ந்த கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தி மற்றும அவரது குடும்பத்தினருக்கு இடையே கடந்த திங்கள் அன்று மாலை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கங்காதரை கரம் பிடிப்பதில் கீர்த்தி உறுதியாக இருந்துள்ளார்.

இதையடுத்து கீர்த்தியை செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அவரது சகோதரர் அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கம்மசமுத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in