

மதுரை: மதுரை அருகே கலவரக் கும்பலால் தாக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் இருந்து ரூ.5 லட்சம், 5 பவுன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருடுபோனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகிலுள்ள கருவனூர் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம், திமுக கிளைச் செயலர் வேல்முருகன் தரப்பினருக்குள் பிரச்சினை எழுந்தது.
இதுதொடர்பாக, இரு தப்பினரும் மோதிக் கொண்டனர். இதன் எதிரொலியாக, கருவனூரிலுள்ள முன்னாள் எம்எல்ஏவின் வீட்டுக்குள் வேல்முருகன் தரப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த கார், பைக்குகளுக்கு தீ வைத்துச் சேதப்படுத்தினர்.
போலீஸ் வழக்குப் பதிவு: இதுகுறித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த சுமார் 18-க்கும் மேற்பட்டோர் மீது எம். சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பொன்னம்பலம் (65), அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம் (45), தில்லையம்பலம்(42) திமுக நிர்வாகி வேல்முருகன்(40), செந்தமிழன் (35), அவரது சகோதரர் ராஜ்மோகன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, பொன்னம்பலம் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம், 5 பவுன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருடு போனதாக அவரது மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு சென்று, கும்பலால் தாக்குதலில் சேதமடைந்த வாகனங்களைபார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதுதொடர்பாக ஆர்பி உதயகுமார் கூறுகையில், ‘கருவனூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை திமுக தரப்பினர் தாக்கி வீட்டைச் சேதப்படுத்தி உள்ளனர். அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வீட்டுக்குள் புகுந்து பத்திரங்களை எடுத்துசென்றுள்ளனர். சட்ட ரீதியாக அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
சுழற்சி முறையில் பாதுகாப்பு: தொடரும் மோதல் சம்பவத்தால் கருவனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. கோயில் திருவிழாவில் பங்காளிகளுக்கு இடையே நடந்த மோதல் தற்போது அரசியல் ரீதியிலான மோதலாக பார்க்கப்படுகிறது.
மேலும், மோதல் ஏற்படாத வகையில் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.