சென்னை | ரயிலில் கத்திமுனையில் பெண் பயணியிடம் 9 பவுன் நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது

விரைவு ரயிலில் பெண் பயணியிடம் 9 பவுன் நகைகளை பறித்த வழக்கில் கைதான ஷாஜகான், பாஸ்கரன், ஜேஸ்வா, தங்கபாண்டி.
விரைவு ரயிலில் பெண் பயணியிடம் 9 பவுன் நகைகளை பறித்த வழக்கில் கைதான ஷாஜகான், பாஸ்கரன், ஜேஸ்வா, தங்கபாண்டி.
Updated on
1 min read

சென்னை: சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்(34). இவரது மனைவி சரண்யா. இவர்கள் தங்களின் 2 குழந்தைகளுடன் திருப்பதிக்கு சென்றனர். பின்னர் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மும்பையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவுரயிலில் (22157) கடந்த 25-ம் தேதி இரவு 7.20 மணிக்கு ஏறினர்.

இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பெட்டியில் ரமேஷ்ஏறினார். முன்னதாக, இவரது மனைவி சரண்யா மற்றும் பிள்ளைகளை மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் ஏற்றிவிட்டார். இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தைக் கடந்து மெதுவாக வந்தபோது, அடையாளம் தெரியாத ஒருநபர், சரண்யா அமர்ந்திருந்த பெட்டியில் ஏறினார்.

இந்த ரயில் வண்ணாரப்பேட்டை-சென்னை கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே இரவு 9.48 மணிக்கு வந்தபோது, அந்த நபர் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, சரண்யாவிடமிருந்து 9 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்து பெரம்பூர் ரயில்வேகாவல் நிலையத்தில் ரமேஷ் புகார்கொடுத்தார். சென்னை ரயில்வேகாவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில் ரயில்வேடிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் பெரம்பூரைச்சேர்ந்த ஷாஜகான்(35) என்பவருக்குத் தொடர்பு இருப்பதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர்.பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை தனிப்படை போலீஸார் நேற்று காலை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சரண்யாவிடம் நகைகளைப்பறித்ததை ஒப்புக்கொண்டார். அந்தநகைகளை விற்க முயன்றபோது, கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கரன்(29), அம்பத்தூர் ஜோஸ்வா(24), வியாசர்பாடி தங்கபாண்டி (27) ஆகியோர் பறித்துச் சென்றதாககூறினார்.

இதையடுத்து, வியாசர்பாடி ரயில்நிலையத்தில் வைத்து அவர்கள் 3 பேரையும் ரயில்வே போலீஸார் கைது செய்து, 2 தங்க நகைகள், 2 மோதிரம் ஆகியவற்றை மீட்டனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, சம்பவம் நடைபெற்ற 36 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாரை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in