

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். முன்னாள் ஊராட்சித் தலைவர். தற்போது இவருடைய மனைவி விஜயலட்சுமி ஊராட்சித் தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியில் வசிக்கின்றனர். கொப்பு சித்தம்பட்டியில் உள்ள இவர்களது வீட்டை, ஜெய்சங்கரின் அக்கா பஞ்சவர்ணம் பராமரித்து வருகிறார்.
கொப்பு சித்தம்பட்டியில் தாமரைச்செல்வன் என்பவரது மனைவி பூரண அபி என்பவர், கடந்த முறை நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் தாமரைச்செல்வனுக்கும் ஜெய்சங்கருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில், கொப்பு சித்தம்பட்டியில் உள்ள ஜெய்சங்கரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து புகாரின்பேரில் பந்தல்குடி போலீஸார் தாமரைச்செல்வன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.