

சென்னை: மயிலாப்பூரில் நட்சத்திர ஓட்டலில் லிப்டில் சிக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
சென்னை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் பெரம்பூர், கூக்ஸ் சாலை,ஹைதர் கார்டன் பிரதான தெருவைச் சேர்ந்த அபிஷேக் (28).
இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்டில், ட்ராலியில் பொருட்களை எடுத்துக் கொண்டு 11-வது மாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கவனக்குறைவால் 2 மாடிகளுக்கிடையே சிக்கிக் கொண்டார். உடனடியாக இது குறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
எழும்பூர், மயிலாப்பூர் பகுதிகளிலிருந்து விரைந்து சென்றதீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி அபிஷேக்கை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர். கதவு மூடாமல் இருந்ததாலேயே அபிஷேக் தவறி விழுந்து நசுங்கி இறந்தாகக் கூறப்படுகிறது.