

கோவை: கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்க்கி (56). பாஜக ஆதரவாளர்.
இவர், சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரீஷ், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிந்து கடந்த 20-ம் தேதி உமா கார்க்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், உமாகார்க்கியை இருநாள் காவலில் எடுத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். தங்களிடம் வந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபின், உமா கார்க்கியை நேற்று சென்னைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.