

செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டு கழிவுநீர் ஊர்தி உரிமையாளரை மிரட்டும் காவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் சம்பவத்தில் ஈடுபட்ட இரு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் கழிவுநீர் வாகனம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கழிவுநீரை ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வாகனத்தை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் நிர்மல் குமார், இளவரசன் ஆகியோர் மடக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லாரியின் ஓட்டுநரை மிரட்டி உரிமையாளரின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு காவலர் நிர்மல் குமார் பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. அதில், காவலர் நிர்மல் குமார் பேசும்போது, “கழிவுநீர் வாகனத்தை வைத்துள்ளீர்கள். காவல் நிலையத்தில் யாரை பார்க்கிறீர்கள்? உங்களுடைய வீடு எங்கு உள்ளது? வாகனம் ஓடும்போதுதான் உங்களை பிடிக்க முடியும். புதிய போலீஸோ, இல்லை பழைய போலீஸோ, யாராக இருந்தாலும் பார்க்க வேண்டும்.
நான் காவல் நிலையம் வந்து கடந்த இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை உன்னை பார்க்கவில்லை, எங்கு இருக்கிறாய் உடனடியாக உன்னைப் பார்க்க வேண்டும், நீ கழிவுநீர் வாகனத்தை வைத்து சம்பாதித்துக் கொண்டு இருந்தால், சுற்றும் நாங்கள் என்ன பைத்தியமா?” என ஆனந்தனிடம் காவலர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், “உனது வாகனத்தை ஆர்டிஓஅலுவலகத்துக்கு எடுத்து சென்றுவிடுவேன்” என மிரட்டுவதும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆனந்தன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆடியோ பதிவுடன் புகார் மனுவை அளித்துள்ளார். ஆனந்தனை மிரட்டிய காவலர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் நிர்மல் குமார் மற்றும் இளவரசனை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.