‘நானொரு டம்பி பீஸ், திருந்தி வாழ வாய்ப்பளியுங்கள்’ - காவல்துறையை ஏமாற்றி குற்றம் புரிகிறாரா வரிச்சியூர் செல்வம்?

‘நானொரு டம்பி பீஸ், திருந்தி வாழ வாய்ப்பளியுங்கள்’ - காவல்துறையை ஏமாற்றி குற்றம் புரிகிறாரா வரிச்சியூர் செல்வம்?
Updated on
2 min read

மதுரை: மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள், சென்னைமற்றும் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிங்களிலும் தனது பெயரை தெரியவைத்து செவாக்குமிக்கவராக திகழ்ந்தவர் வரிச்சியூரான் என்ற வரிச்சியூர் செல்வம்.

அவரது பெயர் செல்வம் என்றாலும், அவரது குற்றச் செயல்களை வைத்தே அவரது ஊரின் பெயருடன் பிரபலமானார். ஒரு காலத்தில் சிறு, சிறு தவறுகள் செய்ததற்காக என்னை ரவுடி என பெரிதாக்கி சொல்கிறார்கள், ‘நானொரு டம்மி பீஸ், என்னை திருந்தி வாழவிடுங்கள்’ போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், நல்லவர் போன்று சித்தரித்தும், வலம் வந்த வரிச்சியூர் செல்வம் தற்போது, தனது கூட்டாளியை கொன்று துண்டுதுண்டாக வெட்டி தாமரபரணி ஆற்றில் வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மதுரையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வரிச்சியூர் என்ற கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், தற்போது மதுரை கோமதிபுரத்தில் வசிக்கிறார். இவரை பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த விவசாயி கருப்பையாவுக்கு நிலங்கள் அதிகமாக இருந்துள்ளன. விவசாயத்துடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். 2வது மனைவி சரசுவின் மகன்தான் வரிச்சியூர் செல்வம். 7ம் வகுப்புவரை படித்து இருக்கிறார். தந்தையை போன்று இவருக்கும் முத்துலட்சுமி, சித்ரா, கவிதா என மூன்று மனைவிகள். கடையநல்லூரைச் சேர்ந்த 2வது மனைவி சித்ரா கல்லூரி மாணவியாக இருந்தபோது, அவரை திருமணம் செய்தார். அவரை குரூப்-1 தேர்விற்கு தயார்படுத்தியபோதிலும், தேர்ச்சி பெறவில்லை.

முதல் கொலை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வரிச்சியூர் செல்வம் கண்முன் தந்தை கருப்பையா அண்ணா பேருந்து நிலைய பகுதியில் சிலரால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மதுரை நீதிமன்ற பகுதியில் தந்தையை கொன்றவரை செல்வம் கொலை செய்தார். இதுதான் அவருக்கு முதல் கொலை. இதன்பின், சொத்துக்காக தந்தையின் 3வது மனைவியும், தனது சித்தியுமான மல்லிகாவை 1992ல் கொன்றார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, ஆள் கடத்தல், மோசடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. மதுரை மாநகர் மற்றும் சென்னை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் இவர்மீது வழக்குகள் இருக்கின்றன. சில வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில், சில வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. 2003 முதல் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் ரவுடி சரித்திர பட்டியலில் இடம்பெற்று தொடர்கிறார்.

பொதுவாக இவர், தடயமின்றி குற்றச்செயல்கள் புரிவதில்லை வல்லவர். பங்களா போன்ற ஆடம்பர வீடுகளில் வசிப்பது, விலை உயர்ந்த கார்களில் வலம் வருவதை விரும்புவார். தற்போது, இவரிடம் 8 கார்கள் உள்ளன. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே உடல் முழுவதும் அதிக தங்க நகைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். தங்கத்தைவிட மனித உயிர் விலை மதிக்க முடியாதது எனக் கருதி கரோனா நேரத்தில் 12 பவுனில் முகக்கவசம் அணிந்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

குற்றம் புரியும் நேரத்தில் கேரளா, பெங்களூர், ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று பதுங்குவார். சென்னையில் சினிமாத்துறையிலும் பைனாஸ் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தெல்லாம் செய்திருக்கிறார். ஒரு முறை மனைவி சித்ரா மூலம் நீதிமன்றத்தில் மனு செய்து, என்கவுன்டரில் இருந்து தப்பினார்.

‘‘நான் இறப்பதற்கு பயப்படவில்லை. இருப்பினும் மனைவி, குழந்தைகளுடன் கொஞ்ச காலம் திருந்தி வாழவே விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பளியுங்கள்’’ என 2006ல் காவல்துறையில் கடிதம் கொடுத்து இருக்கிறார். மேலும், ‘‘நானொரு டம்பி பீஸ் சார், ரவுடியோ, தாதாவோ கிடையாது. பேரக் குழந்தைகளுடன் தாத்தாவாகவே வசிக்கிறேன்’’ என்றும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வரிச்சியூர் செல்வம்.

இந்த நிலையில்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் தோற்க காரணமாக இருந்ததாக சந்தேகித்து குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், அவரது நண்பர் கொல்லப்பட்டனர். இதில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தனது கூட்டாளியான விருதுநகர் செந்தில்குமாரை கண்டம் துண்டமாக வெட்டி உடல் பாகங்களை ஆற்றில் வீசிய சம்பவத்தில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணராஜ் கொலை குறித்து வரிச்சியூர் செல்வத்திடம் கேள்வி கேட்டதற்காக அவர் கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிகிறது. இதன்மூலம் நான் ரவுடி இல்லை என காவல்துறையை ஏமாற்றி குற்றச்செயல் புரிந்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது. இவரது கைது நிகழ்வை மதுரை உயர் நீதிமன்றமும் பாராட்டியிருக்கிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in