

விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. கடந்த 2021-ம் ஆண்டு திடீரென இவர் காணாமல் போனார். இது பற்றி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் செந்தில் மனைவி முருகலட்சுமி புகார் அளித்தார். மேலும், தனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுபற்றி தென்மண்டல ஐஜி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், செந்தில் கொலை செய்யப்பட்டதும், இதில் வரிச்சியூர் செல்வத்துக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. அதையடுத்து, தனிப்படை போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
நேற்று மதுரையிலும் விருதுநகரிலும் வரிச்சியூர் செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது செந்திலை சென்னைக்கு அனுப்பி வைத்ததும், அங்கு வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் 3 பேர் செந்திலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட வரிச்சியூர் செல்வத்தின் மீது படைக்கல சட்டப்பிரிவு, ஆள் கடத்தல், கொலை, உண்மையை மறைத்தல் என 147, 148, 364, 149, 302, 404, 201, 120, 25(1) a25, ஆகிய 10 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், வரிச்சியூர் செல்வம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ராஜபிரபு முன்னிலையில் நேற்று இரவு ஆஜர் படுத்தப்பட்டார். வரிச்சியூர் செல்வத்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ராஜபிரபு உத்தரவிட்டார். பின்னர், பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.