

விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. மதுரை கருப்பாயூரணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 4வது குற்றவாளியான செந்திலை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதேவேளையில், விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டதால், தனது கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து இந்த மனு தொடர்பாக அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீஸார் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடித்தனர். மதுரை அழைத்துச் சென்ற போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபின் தனிப்படை போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.