

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேட்ட வலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேல் மகன் தங்கராசு (29).
இவர், கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களும் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறைக்கு மனு அளித்துள்ளதாகவும், இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு வேறு தரப்பை சேர்ந்த ராஜாராம் மகன் செந்தமிழ் (33) எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் முகநூல் பதிவு மூலமாக தொடர்ந்து மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே தங்கராசுவுக்கும் செந்தமிழுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தமிழுக்கு ஆதரவாக உத்திரகுமார் செயல்பட்டுள்ளார். இவர்களது மோதலை கிராம மக்கள் தடுத்துள்ளனர்.
மோதலில் காயமடைந்ததாக தங்கராசு மற்றும் செந்தமிழ் ஆகியோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தமிழை வேட்டவலம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் உத்திரகுமார் தேடப்பட்டு வருகிறார். இதேபோல், செந்தமிழ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தங்கராசு கைது செய்யப்பட்டுள்ளார்.