திருச்சி மாவட்டம் வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் வாளாடி பகுதியில் தண்டவாளத்தில் டயர்கள் வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்த 2-ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாகச் சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில், அந்த டயர்கள் மீது மோதியதில், ரயில் இன்ஜினில் இருந்த மின் இணைப்பு பெட்டி சேதமடைந்தது. இதனால், அடுத்தடுத்த 4 பெட்டிகளில் மின்தடை ஏற்பட்டது. மேலும், ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக விருத்தாசலம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தலைமையிலான 3 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேலவாளாடி பெரியார் தெருவைச் சேர்ந்த பிரபாகரன்(44), கார்த்தி(33), வெங்கடேசன்(36) ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அப்போது, தங்களுடைய பகுதிக்கு தேவையான சாலை வசதி, சுரங்கப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in