Published : 15 Jun 2023 08:18 AM
Last Updated : 15 Jun 2023 08:18 AM

கோவையில் மதம் சார்ந்த விவகாரங்களில் தீவிரப்போக்கு உடையவர்களை கண்காணிக்கும் போலீஸார்

கோவை: கோவையில் மதம் சார்ந்த விவகாரங்கள், கருத்தியல் ரீதியாக தீவிரமாக உள்ளவர்கள் என ஏறத்தாழ 200 பேரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்ஐசி) போலீஸார் கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்தாண்டு அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முபின், கோவையில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவினர் (ஐ.எஸ்), மத ரீதியிலான தகவல்களை விசாரிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (எஸ்ஐசி) ஆகியோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கத் தொடங்கினர்.

மேலும், மதம் சார்ந்த விவகாரங்கள், தங்கள் மதம் சார்ந்த கொள்கைகளில் தீவிரமாக இருக்கும் நபர்களின் செயல்பாடுகளையும் எஸ்ஐசி போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதனடிப்படையில், சந்தேகத்துக்குரிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்ததாக இருவரைப் பிடித்து எஸ்ஐசி போலீஸார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

காவல்துறை அதிகாரி கூறும்போது, ‘‘கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். ஏறத்தாழ 200 பேரை கண்டறிந்துள்ளோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என எல்லா தரப்பினரும் இதில் அடக்கம். இவர்களின் செயல்பாடுகள், செல்லும் இடங்கள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்ட விவரங்களையும், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x