கோவில்பட்டியில் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது

வசந்த மல்லிகா
வசந்த மல்லிகா
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர், அவரது ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி விமான் நகரைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் தனது மனைவி சந்திராவதி பெயரில் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி பகுதியில் 36 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தடையில்லா சான்றிதழ் பெற கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.

அப்போது வட்டாட்சியர் வசந்த மல்லிகா ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க மனமில்லாத ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர்கள் சுதா, அனிதா மற்றும் போலீஸார் கோவில்பட்டிக்கு வந்தனர். அவர்கள் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரம் நோட்டுகளை ராஜாராமிடம் வழங்கினர்.

அவர் மதியம் 2 மணிக்கு மேல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் வசந்த மல்லிகா சந்திக்க சென்றார். அங்கு வட்டாட்சியரின் ஓட்டுநர் கிருஷ்ணா (54) மூலமாக ரூ.30 ஆயிரம் வட்டாட்சியர் வசந்த மல்லிகாவிடம் (51) வழங்கப்பட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் சுமார் 3 மணி நேரத்துககு மேல் விசாரணை நடத்தினர். பின்னர், வட்டாட்சியர் வசந்த மல்லிகா, அவரது ஓட்டுநர் கிருஷ்ணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வசந்தமல்லிகா மே 5-ம் தேதி தான் கோவில்பட்டியில் வட்டாட்சியராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in