

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மடிச்சல் ஈத்தவிளையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பெர்ஜின் ஜோஸ்வா (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார்
இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தருவதாக கூறி, மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னை தோப்புக்கு மாணவியை நேற்று பெர்ஜின் ஜோஸ்வா வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியை வெட்டிவிட்டு பெர்ஜின் ஜோஸ்வா தப்பியோடிவிட்டார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெர்ஜின் ஜோஸ்வா மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, மார்த்தாண்டம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.