

மும்பை: மும்பை போரிவாலி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சனே(56).போரிவாலி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ரூ.5,000 சம்பளத்துக்கு பணியாற்றியுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் முன் ரேஷன் கடைக்கு வந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுடன் மனோஜுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் மிரா ரோடு பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தனர். மனோஜுக்கு சொந்தமாக போரிவாலி பகுதியில் வீடு ஒன்று உள்ளது.
அதிலிருந்து மாதம் ரூ.35,000 வாடகை வருகிறது. இந்த வருவாயை வைத்து அவர் குடும்பம் நடத்தியுள்ளார். கடந்த மாத இறுதியில் ரேஷன் கடை உரிமம் ரத்தாகியதால், மனோஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது மனோஜ் , சரஸ்வதி வைத்யா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோஜ் வசிக்கும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீஸார் வந்து மனோஜ் வீட்டில் சோதனையிட்டபோது, குக்கரில் வேகவைக்கப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் இருந்துள்ளன.
இது குறித்து மனோஜிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன. தன்னுடன் வாழ்ந்து வந்த சரஸ்வதி குடும்பத் தகராறுகாரணமாக தற்கொலை செய்துகொண்டதாக மனோஜ் கூறியுள்ளார். சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்த மனோஜ் முடிவு செய்துள்ளார். உடல் கெட்டுபோவதை தாமதம் செய்வதற்காக, 5 பாட்டில் நீலகிரி தைலத்தை வாங்கி சரஸ்வதியின் உடலில் ஊற்றியுள்ளார். பின் குளியலறையில் வைத்து சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்துள்ளார். இப்படியாக 3 பிளாஸ்டிக் பைகளில் உடல் பாகங்கள் இருந்துள்ளன. சில பாகங்களை கழிவறை மூலமாக வெளியேற்றியுள்ளார். சில பாகங்களை ஒரு பையில் எடுத்துச் சென்று தெரு நாய்களுக்கு உணவாக போட்டுள்ளார்.
டெல்லியில் நடந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவத்தில், அவரது உடலை காதலன் அப்தாப்பூனாவாலா ப்ரிட்ஜில் துண்டு துண்டாக வெட்டி வைத்து வீசியதுபோல், சரஸ்வதியின் உடல் பாகங்களை அப்புறப்படுத்த முடிவு செய்ததாக போலீஸாரிடம் மனோஜ் கூறியுள்ளார். மனோஜை ஜூன் 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.