Published : 10 Jun 2023 06:09 AM
Last Updated : 10 Jun 2023 06:09 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் சுண்டகாட்டு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மாடசாமி. கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனார். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
அதே பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக தனது வீட்டை லட்சுமணன் சீரமைத்து வந்தார். வீட்டின் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது. புகாரின்பேரில் இலத்தூர் போலீஸார் அங்கு சென்று, எலும்புக்கூடை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
எலும்புக்கூடாக கிடந்தவர் காணாமல் போன மாடசாமி என்பது தடயவியல் சோதனையில் தெரியவந்தது. லட்சுமணனின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பேச்சியம்மாள் என்ற பிரியா (24) வீட்டைக் காலி செய்துவிட்டு, கோவைக்கு சென்றது தெரியவந்தது. அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் கோவைக்கு சென்று அவரை அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
பேச்சியம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருக்கும், மாடசாமிக்கும் கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. மாடசாமி அடிக்கடி தொந்தரவு செய்ததால், அவரை கழுத்தை நெறித்து பேச்சியம்மாள் கொலை செய்துள்ளார். பின்னர், அதே பகுதியில் வசிக்கும் தனது தாயார் மாரியம்மாள் (44) மற்றும் 17 வயது தம்பி ஆகியோருடன் சேர்ந்து, வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் உடலை போட்டுள்ளனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் எதுவுமே தெரியாததுபோல் சகஜமாக இருந்துள்ளனர். அதன்பின்பு மாடசாமியின் சகோதரி திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பின்னர் தாயார், தம்பி, குழந்தைகளுடன் கோவைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பேச்சியம்மாள், அவரது தாயார் மாரியம்மாள், 17 வயது தம்பி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT