மது போதையால் விபரீதம்: தருமபுரி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி

மது போதையால் விபரீதம்: தருமபுரி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நன்றாக நீச்சல் தெரிந்திருந்தபோதும் மது போதையால் கூலித் தொழிலாளி ஒருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாலக்கோடு வட்டம் கேத்தனஅள்ளி அடுத்த உழவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணி (33). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதிக அளவில் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி இருந்த கணவர் குறித்து தகவல் அறிந்த மணியின் மனைவி பூங்கொடி கணவரை வீட்டுக்கு அழைத்துவர நேரில் சென்றுள்ளார். அங்கு, நிற்க முடியாத அளவு போதையில் இருந்த மணியை அப்பகுதியில் இருந்த கிணற்றருகே அழைத்துச் சென்று தொட்டியில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி கணவரை குளிக்க வைத்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற மணி, தனக்கு முழுமையாக போதை தெளியவில்லை என்றும் மீண்டும் குளித்து விட்டு வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார். இவ்வாறு குளிக்கச் சென்றபோது தவறி கிணற்றில் விழுந்துள்ளார். நன்றாக நீச்சல் தெரிந்திருந்தபோதும் மது போதை காரணமாக மணியால் நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸார் மணியின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in